GLFC

GOODLUCK FRIENDS PODAKKUDI


'நோன்பு' சட்டம் - சலுகை - பரிகாரம்
நோன்பு என்றால் என்ன?

மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியமாகும் இது.

பசியின் தன்மை உணர்த்தப்படுகிறது.

வேண்டா கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் நலம் காக்கப்படுகிறது.

தீய எண்ணங்களும் செயல்களும் மனிதனை விட்டு விலகி ஓடுகின்றன.

பிறர் மீதான அக்கறையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும் மனப்பக்குவமும் கூடுகின்றது. அதிகமான இறை வணக்கங்களால் மனம் மிகுந்த அமைதிப் பெறுகிறது.

பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் வந்தடைந்து விடாமல் இருக்க இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழிவகுக்கிறது.

நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி முஸ்லிம் திர்மிதி)

நோன்பு எதற்கு?

பகல் நேரங்களில் மனிதனை வருத்தி அவன் தோற்றத்தை பலவீனப்படுத்துவது நோன்பின் நோக்கமல்ல பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக இறைவன் நோன்பை கடமையாக்கி இருந்தால் இரக்க குணமிக்க இறைவனின் பண்பிற்கு மாற்றமாக அது அமைந்து விடும். அதனால் மனிதனை பலவீனப்படுத்தத் தான் நோன்பு என்ற எண்ணமோ அர்த்தமோ தவறானதாகும்.

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது நீங்கள் உள்ளச்சமுடையோராய் ஆக வேண்டும் என்பதற்காக. (அல் குர்ஆன் 2:183)

மனிதனிடம் இறைவன் பற்றிய உள்ளச்சம் வந்து விட்டால் அவன் தூய்மையடைய அது வழிவகுத்துவிடும் இதற்கான முழு பயிற்சியையும் நோன்பின் மூலம் மனிதன் - ஓரிறை நம்பிக்கையாளர்கள் - பெற முடியும். உலகில் நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் இறைவன் பற்றிய அச்சமும் அவன் பற்றிய நம்பிக்கையும் இல்லாததேயாகும். நோன்பு தொழுகைப் போன்ற பயிற்சியின் வாயிலாக மனிதன் இறைவன் பற்றிய நம்பிக்கையையும் அச்சத்தையும் வளர்த்துக் கொள்ளும் போது அவன் மூலம் பிறருக்கு எவ்வித கெடுதிகளும் ஏற்படுவதில்லை. அல்லது மிகவும் குறைவான கெடுதிகளே அவனால் வெளிப்படும்.

இறைவனுக்காக ஒருவன் தனக்கு பிடித்த - அனுமதிக்கப்பட்ட - உணவுகளை பகல் பொழுதில் திரும்பிக் கூட பார்ப்பதில்லை பிறர் தூண்டினால் கூட உண்பதில்லை இவ்வாறு ஒருநாள் இரண்டுநாள் என்றில்லாமல் ஒருமாதம் முழுதும் பயிற்சி எடுக்கிறான் என்றால் அவனது இந்த பயிற்சியின் பக்குவம் மற்ற மாதங்களில் வெளிப்படவே செய்யும். இறைவன் விரும்பாத செயல்களிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வான். இதன் மூலம் அவன் வாழ்வு நிம்மதி அடைவதோடு மட்டுமல்லாமல் அவன் வழியாக பிறரும் நிம்மதியும் - உதவியும் பெறுகிறார்கள்.

வருடந்தோரும் உலக முஸ்லிம்களை சந்தித்து விட்டு செல்லும் இந்த நோன்பின் மூலம் உரிய பயிற்சியைப் பெறாதவர்கள் பயனற்றவைகளுக்கு உதாரணமாகி விடுகிறார்கள்

வயிற்றுப் போக்கு நோயால் அவதிப்படும் ஒருவனுக்கு டாக்டர் சில மருத்துவ முறைகளை கையாள சொல்கிறார். மருத்துவரை சந்தித்து அவருக்குரிய பணத்தையும் கொடுத்து விட்டு மருந்து சீட்டையும் வாங்கி வரும் நோயாளி மருத்துவர் சொன்ன அறிவுரையை மட்டும் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் மருத்துவரை சந்தித்த சந்திப்பில் எப்படி ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விடுமோ அதே போன்று தான் இந்த ஆன்மீக மருத்துவ மாதத்தை சந்தித்து அதில் பயிற்சிப் பெறாதவர்களின் நிலையுமாகும்.

தன் வயிற்றில் பிறந்த பிள்ளை நல்லப்பிள்ளையாக வளர வேண்டும் என்று நினைக்கும் தாய்க்கு கூடுதல் பொறுப்பு உண்டு. தாய் என்ற உலகத்தை தாண்டி வேறு உலகத்தை குழந்தை எட்டிப்பார்க்க துவங்கும் போது தாயின் கூடுதல் பொறுப்பு வேலை செய்ய துவங்கி விட வேண்டும்.

ஒரு மாணவன் சிறந்தவனாக உருவாக ஆசிரியருக்கு அதிக பொறுப்பு உண்டு. வகுப்பறையைக் கடந்து இதர மாணவர்களோடு அவன் கலக்கும் போது ஆசிரியரின் பொறுப்பு உஷார் நிலையை எட்டி விட வேண்டும்.

தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசைப்படும் குடும்பத் தலைவனுக்கும் கூடுதல் பொறுப்பு உண்டு. பணத்திலோ - ஆடம்பரத்திலோ - சுக போகங்களிலோ குடும்பம் காலடி எடுத்து வைக்கும் வேலைகளில் இவனுடைய கரம் நீண்டு அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த கூடுதல் பொறுப்பு குழந்தையையும், மாணவனையும், குடும்பத்தையும் இடற்பாடில்லாத அல்லது இடற்பாடு மிகக் குறைந்துப் போன ஒரு நல்லப் பாதையில் வழி நடத்தி செல்ல உதவும். உலகம் என்ற பகட்டுப் பல்லக்கில் மனிதன் ஊர்வலம் வர துவங்கி விட்டான். உச்சியில் ஊர்வலம் போகும் மனிதனுக்கு உலகம் அழகாகத் தெரியும். இந்த சந்தர்பங்களிலெல்லாம் அவன் பல்லக்கிலிருந்து தவறி விழுந்து விடாமலிருக்க அந்தப் பல்லக்கை இயக்குபவனுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த கூடுதல் பொறுப்பின் வெளிபாடுகளில் ஒன்றுதான் இந்த நோன்பு. இந்த பயிற்சியை முறையாகப் பெற்றால் வழி கேடுகள் என்ன வசீகரித்தாலும், உலகத்தின் பனிப் பாறைகள் பள்ளத்தாக்குகள் தன்னை நோக்கி ஈர்த்தாலும் பல்லக்கிலிருந்து தவறி விழும் அபாயம் நம்மை அண்டாது. சிந்திக்கும் மக்களுக்கு ரமளான் நல்லப் பயிற்சிக் கொடுக்கும்.

இறையச்சம் உலகில் மிகைக்கும் போது சாந்தி சமாதானம் எங்கும் வியாபித்து நிற்கும். இறையச்சமுள்ள மனிதன் பிற மனிதனுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்த மாட்டான். இதற்காக இஸ்லாம் பல்வேறு வழிகளில் மனிதனை பக்குவப்படுத்த வழிவகுக்கின்றது. அதில் ஒன்று நோன்பு. வருடந்தோரும் ஓராண்டு இந்த பயிற்சியில் ஒன்றிணையும் போது இந்தப் பயிற்சியின் தாக்கமும் விளைவும் வாழ்வில் பிரதிபளிக்கவே செய்யும்.

தீயவை அனைத்திலிருந்தும் ஒதுங்கும் மாதம் இது. பார்க்கும் சுதந்திரம் இருந்தும், கேட்கும் சுதந்திரம் இருந்தும், பேசும் சுதந்திரம் இருந்தும், சுவைக்கும் சுதந்திரம் இருந்தும் தனக்குள்ள சுதந்திரத்தைக் கூட இறைவனுக்காக புறந்தள்ளி வைக்கும் பயிற்சி. இறை வணக்கங்களிலும், இறை நினைவிலும் திளைத்திருக்கும் பயிற்சி. இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுவோர் வெறும் சில நூறுகளோ, சில லட்சங்களோ, ஏன் சில கோடிகளோ அல்ல. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் கூட இந்தப் பயிற்சியில் தன்னை விரும்பி இணைத்துக் கொண்டு குதூகளிக்கும் ஆனந்தம்.

நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. இறைநம்பிக்கையுள்ள மனிதன் தூய்மையடைய வேண்டும் என்பதற்காக.

எத்துனை நாட்கள்?

ரமளான் என்பது ஒரு மாதத்தின் பெயர் என்றாலும் சந்திர சுழற்சியை மையமாகக் கொண்ட மாதம் என்பதால் இறைவன் நோன்பிற்கான கால அளவை நாட்கள் என்றே குறிப்பிடுகிறான்.

எண்ணப்படும் நாட்களில் நோன்பு கடமையாகும். (அல்குர்ஆன் 2:184)

எண்ணப்படும் நாட்கள் என்பது 29 நாட்களாகவோ, 30 நாட்களாகவோ இருக்கலாம். துவக்கத்திற்கும் முடிவுக்கும் பிறைப் பார்த்தாக வேண்டும்.

பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். (அனைத்து நபிமொழி நூட்களிலும் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது).

பிறை வழிகாட்டல் பற்றியக் கட்டுரை தனியாக இடம் பெற்றுள்ளது
பிறைப்பார்ப்பதின் அறிவியல் அர்த்தம் (கட்டுரை)

சலுகையளிக்கப்பட்டவர்கள்.

மனித பலவீனங்களை கருத்தில் கொண்டு இறைவன் இஸ்லாமிய வரையறைகளில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளான். நோன்பும் சிலருக்கு சலுகையளிக்கின்றது.

1)நோயாளிகள்.

நோன்பு நாட்களில் ஒருவர் நோய்வாய்படுகிறார். அது தலைவலியோ, காய்ச்சலோ, அல்லது வயிற்றுக் கோளாறுகளோ அல்லது இன்ன பிற எதோ ஒரு நோய். இந்த நோயின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் இந்த நோயால் நோன்பு வைக்க முடியாது அல்லது நோன்பு வைத்தால் நோயின் பாதிப்பு அதிகமாகும் என்று கருதுபவர்கள் நோயின் போது நோன்பு வைக்காமல் ரமளானுக்கு பிறகு நோயிலிருந்து குணமடைந்தவுடன் விடுபட்ட அனைத்து நோன்பையும் நோற்றுவிட வேண்டும்.

ஏமாறுவது நாமே!

இறைவன் பொதுவாக நோயாளி என்று தான் குறிப்பிடுகிறான். இன்ன இன்ன நோய்க்கு சலுகை என்று குர்ஆனிலோ சுன்னாவிலோ பட்டியல் எதுவும் இல்லை. எனவே தலைவலியிலிருந்து மரணப்படுக்கை வரையுள்ள அனைத்து நோயையும் இது உள்ளடக்கவே செய்யும். இந்த நோய், அந்த நோய் என்று வரையறைப் போடும் உரிமை எவருக்கும் இல்லை என்றாலும் முஸ்லிம்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

சாதாரணமாகவே நோன்பு வைக்கும் முதல் நாளில் சிலர் தலைவலிக்கு ஆட்படலாம். நோன்பு திறக்கும் பொழுதுகளில் அனைவருக்குமே ஒரு வித மயக்கம் ஏற்படும். பட்டினி இருக்கும் பொழுதுகளில் வயிற்றில் புரட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படவே செய்யும். இதையெல்லாம் நோய் என்ற பட்டியலில் கொண்டு வந்து 'தான் நோயாளி' என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு நோன்பு வைக்காமல் இருப்பது அறிவுடமையாகாது. அப்படி செய்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். தலைவலி, மயக்கம் போன்ற நோய்கள் சில மணித் துளிகளில் மறைந்து விடக் கூடியதாகும். அதை காரணங்காட்டி நோன்பை முறித்துக் கொள்வது, அல்லது நோன்பு வைக்காமலிருப்பது நம்மீது நோன்பு என்ற கடனை அதிகப்படுத்தி விடும். தவிர்க்க முடியாத நிலை இருந்தால் மட்டுமே நோன்பை விட வேண்டும். பின் வரும் நாட்களில் நோற்கலாம்.

தொடர் நோய்.

முதுமை ஒரு தொடர் நோய். முதுமைக்கு ஆட்பட்டு விட்டவர்கள் மீண்டும் இளமைக்கு திரும்ப முடியாது என்பதால் நோன்பு வைப்பதை கடினமாக கருதும் முதுமையைப் பெற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பது அவர்களின் பலவீனத்தை அதிகப்படுத்தி விடும் என்பதால் இவர்கள் நோன்பிலிருந்து விலக்குப் பெறுகிறார்கள். முதுமையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது 'அறிவு பெற்று வாழ்ந்தும் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்மூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்' என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 22:5) இத்தகையவர்கள் மீது நோன்பு கடமையில்லை.